“நீ சாகவே சாவதில்லை” — வாழ்க்கையிலும் வேலையிலும்/தொழிலிலும் கண்ணிகள் இரகசியமாக எவ்வாறு கட்டுப்பாட்டை எடுக்கின்றன?
“நீ சாகவே சாவதில்லை” — வாழ்க்கையிலும் வேலையிலும்/தொழிலிலும் கண்ணிகள் இரகசியமாக எவ்வாறு கட்டுப்பாட்டை எடுக்கின்றன?
ஆதியாகமம் 3:4 அடிப்படையில் தலைமைத்துவம், வணிகம் மற்றும்
வாழ்க்கைக்கான பாடங்கள் கற்றுக்கொள்ளுவோம்.
“நீங்கள் சாகவே சாவதில்லை.” — ஆதியாகமம் 3:4
ஒரு கண்ணியின் மிகவும் ஆபத்தான தன்மை என்னவென்றால், அது
ஆரம்பத்தில் ஆபத்தானதாகத் தோன்றுவதில்லை.
ஆதியாகமம் 3-ல், சர்ப்பம் வலுக்கட்டாயமாக வரவில்லை.
அது சமாதானப்படுத்தும் வார்த்தைகளால் வந்தது.
அந்த வஞ்சகம் மிகவும் நுட்பமானது:
விளைவுகளை சிறிதாக காட்டியது,
கவர்ச்சியை பெரிதாக்கியது,
பகுத்தறிவை பலவீனப்படுத்தியது,
கீழ்ப்படியாமையை சாதாரணமாக்கியது.
“நீங்கள் நிச்சயமாகச் சாவதில்லை”
என்ற வார்த்தை வெறும் பொய்யல்ல.
அது ஒரு மனோவியல் யுக்தி.
இன்றும் பல தனிப்பட்ட, தொழில்முறை, நிதி மற்றும் ஆவிக்குரிய கண்ணிகள்
இதே மாதிரியான முறையிலேயே செயல்படுகின்றன.
கண்ணியின் செயல்முறை
பெதுவாக கண்ணிகள் 8 கட்டங்களாக வளர்கின்றன.
1. கவர்ச்சி (Attraction)
ஒவ்வொரு கண்ணியும் கவர்ச்சியிலிருந்தே தொடங்குகிறது.
அது சில நேரங்களில்:
விரைவான வெற்றி,
மனஅமைதி,
அங்கீகாரம்,
மறைமுக இன்பம்,
எளிதான பணம்,
ஒழுக்கமற்ற குறுக்குவழிகள்,
ஆரோக்கியமற்ற உறவுகள்,
அகந்தை திருப்தி
போன்றவையாகத் தோன்றலாம்.
ஒரு கண்ணி ஒருபோதும் “நான் அழிவைத் தருகிறேன்” என்று அறிவிப்பதில்லை.
அது பெரும்பாலும் “வாய்ப்பு” போலவே தோன்றும்.
அதனால் தான் உற்சாகத்தைவிட பகுத்தறிவு மிகவும் முக்கியமானது.
2. நியாயப்படுத்துதல் (Rationalization)
அடுத்த கட்டம் உள்மன நியாயப்படுத்துதல்.
மனம் இப்படிச் சொல்லத் தொடங்கும்:
“ஒரே ஒரு தடவை தான்.”
“எல்லாரும் இதையே செய்கிறார்கள்.”
“இதற்கு நான் தகுதியானவன்.”
“இதில் பெரிய பிரச்சனை இல்லை.”
“நான் இன்னும் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறேன்.”
நடத்தை மாறுவதற்கு முன்பே, இந்த நியாயப்படுத்துதல் மனச்சாட்சியை
பலவீனப்படுத்துகிறது.
தலைமைத்துவம், நிதி, உறவுகள் அல்லது நேர்மை ஆகியவற்றில் ஏற்படும்
பெரும்பாலான வீழ்ச்சிகள் வெளியில் தெரியும்முன் உள்ளுக்குள்
ஆரம்பமாகிவிடுகின்றன.
3. இரகசியம் (Secrecy)
கண்ணிகள் இருளில் வளர்கின்றன.
அது:
மறைப்பை,
ரகசிய உரையாடல்களை,
ஆதாரங்களை அழிப்பதை,
இரட்டை வாழ்க்கையை,
பொறுப்புணர்விலிருந்து தப்பிப்பதை
தேவைப்படுத்தத் தொடங்கினால், அது ஆபத்தான கட்டத்தை அடைகிறது.
ஆரோக்கியமான விஷயங்கள் வெளிப்படைத்தன்மையை கண்டு
அஞ்சுவதில்லை. அழிவை ஏற்படுத்தும் விஷயங்கள் இரகசியத்தையே
தேடுகின்றன.
4. மீண்டும் மீண்டும் செய்வது (Repetition)
ஓரே ஒரு முறை என ஆரம்பித்தது மெதுவாக பழக்கமாக மாறுகிறது.
தொடர்ச்சியான சமரசங்களை செய்து:
நடத்தை → பழக்கமாக,
பழக்கம் → சார்பாக,
சார்பு → அடையாளமாக மாறுகின்றன.
சிறிய தவறான முடிவுகளை தொடர்ந்து எடுக்கும்போது அவை குணநலனையே
மாற்றி வடிவமைக்கின்றது.
5. சார்பு நிலை (Dependency)
இந்த நிலையில், ஒருவர் அந்த செயலையோ உறவையோ வெறும்
“பயன்படுத்துவதற்கு மட்டும்” இல்லை.
அது இப்போது:
உணர்ச்சிகளை,
முடிவுகளை,
சிந்தனைகளை
கட்டுப்படுத்தத் தொடங்குகிறது.
ஆரம்பத்தில் கண்ணி சொன்னது:
“நீ இன்னும் கட்டுப்பாட்டில் இருக்கிறாய்.”
ஆனால் இப்போது அது:
“இதில்லாமல் உன்னால் இயங்க முடியாது என்று கூறுகிறது.”
இது:
அடிமைத்தனங்கள்,
அங்கீகார வேட்கை,
கள்ள உறவுகள்,
பேராசை,
அதிகார மோகம்,
டிஜிட்டல் கவனச்சிதறல்கள்,
ஒழுக்கமற்ற வணிக தொழில் நடைமுறைகள்
போன்றவற்றிலும் ஆதிக்கம் செய்கிறது.
6. அடிமைத்தனம் (Bondage)
சுதந்திரம் குறையும் போது அதுவே அடிமைத்தனம் என்றாகிற.
ஒருவர்:
ஆபத்தை அறிந்திருந்தும்,
விளைவுகளை வெறுத்திருந்தும்,
மாற்றம் வேண்டுமென்று நினைத்திருந்தும்
இன்னும் சிக்கியிருப்பதை உணரலாம்.
வேதாகமப்படி அடிமைத்தனம் உடல்ரீதியானது மட்டும் அல்ல.
அது:
மனரீதியாகவும்,
உணர்ச்சிப்பூர்வமாகவும்,
ஒழுக்கரீதியாகவும்,
நிதி ரீதியாகவும்,
ஆவிக்குரிய ரீதியாகவும் இருக்கலாம்.
7. அவமானம் (Shame)
ஆதியாகமத்தில் வீழ்ச்சிக்குப் பிறகு ஆதாமும் ஏவாளும் தங்களை
மறைத்துக்கொண்டார்கள்.
இன்றும் அதே விஷயம் நடக்கிறது.
மக்கள் மறைவதற்கான காரணங்கள்:
தீர்ப்பு,
வெளிப்படுத்தப்படுதல்,
நிராகரிப்பு,
ஏமாற்றம்.
துரதிருஷ்டவசமாக, அவமானம் மனிதர்களை மேலும் ஆழமாக சிக்கவைக்கிறது.
ஏனெனில் மௌனம் குணமடைவதை தடுக்கிறது.
8. தனிமைப்படுத்தல் (Isolation)
ஒரு கண்ணியின் இறுதி தன்மைகளில் ஒன்று பிரித்துவிடுதல்.
மக்கள் விலகத் தொடங்குகிறார்கள்:
வழிகாட்டிகளிடமிருந்து,
ஞானமிக்க ஆலோசனைகளிலிருந்து,
நம்பகமான உறவுகளிலிருந்து,
ஆவிக்குரிய அடித்தளத்திலிருந்து,
பொறுப்புணர்விலிருந்து.
தனிமை பார்வையை பலவீனப்படுத்தி, வஞ்சகத்தை வலுப்படுத்துகிறது.
பல அழிவுக்குரிய சுழற்சிகள் தனிப்பட்ட இடங்களில் சவால் செய்யப்படாமல்
இருப்பதால் தொடர்கின்றன.
இது ஏன் முக்கியம்?
இந்த மாதிரியான செயல்முறைகள் வெறும் தெய்வீக கருத்துகளுக்கு மட்டும்
கட்டுப்பட்டவை அல்ல.
இவை இன்று காணப்படுகின்றன:
தலைமைத்துவ தோல்விகளில்,
வணிக ஊழல்களில்,
நிதி மோசடிகளில்,
அடிமைத்தனங்களில்,
கள்ள் உறவுகளில்,
மனச்சோர்வில்,
ஒழுக்கமற்ற குறுக்குவழிகளில்,
டிஜிட்டல் அடிமைத்தனத்தில்,
அகந்தை வழிநடத்தும் முடிவுகளில்.
வெளிப்புற விளைவுகள் வேறுபட்டாலும், உள்ளார்ந்த செயல்முறை பல
சமயங்களில் ஒரே மாதிரியாக இருக்கும்.
தலைமைத்துவ சிந்தனை
ஒரு கண்ணி விளைவுகளாக மாறுவதற்கு முன்பே அதை அடையாளம் காண்பது
மிகப் பெரிய ஞானங்களில் ஒன்று.
ஒவ்வொரு கவர்ச்சிகரமான வாய்ப்பும் பயனுள்ளதாக இருக்காது.
ஒவ்வொரு குறுக்குவழியும் ஞானமானதாக இருக்காது.
ஒவ்வொரு இரகசிய சமரசமும் என்றென்றும் இரகசியமாக இருக்காது.
ஆதியாகமம் 3 நமக்கு நினைவூட்டுவது:
வஞ்சகம் பெரும்பாலும் விளைவுகளை சிறிதாக்குவதிலிருந்தே தொடங்குகிறது.
“நீங்கள் நிச்சயமாகச் சாவதில்லை.”
ஆனால் வரலாறு, தலைமைத்துவம், மற்றும் மனித அனுபவம் மீண்டும் மீண்டும்
காட்டுவது என்னவென்றால் — மறைக்கப்பட்ட சமரசங்கள் இறுதியில்
வெளிப்படையான விளைவுகளை உண்டாக்கும்.
நேர்மை ஒரே நாளில் அழிவதில்லை.
அது மெதுவாக அரிக்கப்படுகிறது.
இறுதியாக
மிகவும் ஆபத்தான கண்ணிகள் வெளிப்படையானவை அல்ல.
அவை:
கையாளக்கூடியதாகத் தோன்றும்,
தற்காலிகமாக உணரப்படும்,
கட்டுப்பாட்டை வாக்குறுதி அளிக்கும்,
சமரசத்தை அமைதியாக சாதாரணமாக்கும்.
அதனால் தெய்வீக பகுத்தறிவு, பொறுப்புணர்வு, நேர்மை, மற்றும் சத்தியம் —
விசுவாசம், தலைமைத்துவம், வணிகம், தொழில் மற்றும் வாழ்க்கையில் மிகவும்
அவசியமான பாதுகாப்புகளாக இருக்கின்றன.
இன்றைய காலத்தில் மக்கள் குறைத்து மதிப்பிடும் மிகப்பெரிய கண்ணிகள் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
கருத்துகளை பகிருங்கள்.
-முனைவர், அ டைட்டஸ் சாமுவேல்
போதகர்| தொழில்முனைவர்| தொழில்வளர்ச்சி ஆலோசகர் |இயற்பியலாளர்
Comments
Post a Comment